பேட்டிகள்

தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசு வரும்!

செல்வன்

சங்கப்பரிவாரங்கள் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த இந்து அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி அந்திமழையிடம் பேசுகிறார் நம்பி நாராயணன். விஜயபாரதம் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்.

தமிழ்நாட்டில் சங்கப்பரிவார அமைப்புகளின் இலக்கு என்ன?

திராவிட இயக்கங்கள் இது பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண் என்று சொல்கிறார்கள். ஆனால் இது நாயன்மார்கள் பிறந்த மண், ஆழ்வார்கள் பிறந்த மண். தமிழன் யாரும் நாத்திகனாக இருக்க முடியாது. நாலாயிர திவ்யபிரபந்தம், தேவாரம், திருமந்திரம், திருவருட்பா இவையெல்லாம் இல்லாமல் எங்கே இருக்கிறது தமிழ்? ஆகவே தமிழனும் இந்துவும் வேறுவேறு அல்ல என்பதை மக்களுக்குச் சொல்லவேண்டும். தமிழர்கள் எப்போதும் தேசியத்தின் பக்கம்தான் இருந்திருக்கிறார்கள். இதைத்தான் இந்து இயக்கங்கள் சொல்லிவருகிறோம். ஒரு காலத்தில் இங்கு நாத்திகம் உருவாகி இருக்கலாம். அதற்கு அரசியல் காரணங்களே இருக்கின்றன. அந்த காலம் முடிந்துவிட்டது.

திராவிட இயக்கங்களால் தமிழகத்தில் சமூகபுரட்சி நடக்கவில்லையா?

இதில் இரண்டு கருத்துகள் உள்ளன. சமூகப்புரட்சி என்றால் இவர்களால் தமிழர்கள் என்று சொல்லப்படும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் நாத்திகத்தை ஏற்றார்களா? மூடப்பழக்கங்களைக் கைவிட்டார்களா? மூடப்பழக்கத்தில் இருந்து இந்துகள் வெளிவந்தார்கள் என்றால் அதற்கான கூறுகள் இந்த மதத்தில் உள்ளன. இந்து மதத்தை விமர்சிக்கவும் அந்த மதத்தில் இடம் இருக்கிறது. அதைத்தான் தி.க.காரர்கள் செய்தார்கள். அந்த விஷயங்கள் சிந்திக்கப்பட்டு தகுதியான மாற்றங்களை இந்துகள் செய்துகொண்டார்கள். இதற்கான பெருமை இந்துக்களுக்குத்தான் போகவேண்டும், தி.க.வுக்கு அல்ல. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் நாங்கள் தி.க. சொல்வதைக் கேட்டு எங்கள் மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களைக் களைந்துவிட்டோம் என்று சொன்னால் அந்த பெருமையை தி.க. உரிமை கொண்டாடலாம். இந்து மதம் சங்கரர் காலத்திலிருந்து மாறிக்கொண்டிருக்கிறது. ஆதிசங்கரர் செய்யாத புரட்சியையா ராமானுஜர் செய்யாத புரட்சியையா ஈவேராமசாமி நாயக்கரும் அண்ணாவும் செய்துவிட்டார்கள்?

வலதுசாரி இயக்கங்களுக்கு எந்த பலமும் இல்லையே?

அப்படி நான் நினைக்கலே. அரசியல்வேறு ஆன்மீகம் வேறு. இயக்கம் வேறு; கட்சி வேறு. இயக்கத்தைப் பற்றிப் பேசினால் தி.க என்ற இயக்கமே இல்லை. அதைக் காணலை. அவர்களால் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வழிகாட்டவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயக்கங்கள் என்று பார்த்தால் தமிழ்நாட்டிலே வலுவாக இருப்பது இந்து இயக்கங்கள் மட்டுமே. கட்சிக்கு வருவோம். பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. அதிமுகவைக் கூட நிறையபேர் இந்து ஆதரவுக் கட்சியாகப் பார்க்கிறார்கள். காரணம் அவர்கள் திமுகவின் நாத்திகம், பார்ப்பன எதிர்ப்பு, இந்து, இந்தி, சம்ஸ்கிருத எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு இயக்கத்தை, கொள்கையைச் சார்ந்தவர்கள் பல கட்சிகளுக்குச் செல்கிறார்கள். அதுபோல், இந்த மாநிலத்துக்கு இது சரியாக இருக்கும் என்று அதிமுகவை ஆதரிக்கிறார்கள். அதனால் பாஜக வளர்வது கஷ்டமாக உள்ளது. திமுகவும் காங்கிரசும் தமிழ்நாட்டில் இந்துவிரோதக் கட்சிகளாகத் தான் பார்க்கப்படுகின்றன. திருமாவளவனும் சீமானும் இந்துவிரோதிகள் தான். அப்ப இந்துகள் எங்கே போவார்கள். பாஜக, அதிமுகதான் வாய்ப்பு. தெரிந்தோ தெரியாமலோ பாஜகவுக்கு அந்த ஆற்றல் இல்லை என்று நம்புகிறார்கள். எனவே அதிமுகவை ஆதரிக்கிறார்கள்.

சீமான் கூட வீரத்தமிழர் முன்னணி என்று வைத்துள்ளாரே? கிருஷ்ணனையும் முருகனையும் முப்பாட்டன்கள் என்கிறாரே?

காரணம் மிக எளிது. இதைப் பதிவுசெய்யுங்கள். மோடி அரசு சுமார் 9500 தன்னார்வமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதியை தடை செய்துவிட்டது.வெளிநாட்டுப் பணமெல்லாம் நின்றுவிட்டதால் இப்போது எந்த கிருஷ்ணனை மட்டமாகப் பேசினாரோ அவரை தன்னுடைய முப்பாட்டன் என்கிறார். எந்த முருகனைத் திட்டினாரோ அவரை முப்பாட்டன் என்கிறார். நேற்றுவரை இந்து எதிர்ப்பு; இன்று இந்து ஆதரவு என்றால் காசுக்காகத்தான். ஆனாலும் கூட இந்து மதத்தில் முருகனையும் கிருஷ்ணனையும் எப்படி சித்தரிக்கிறோமோ அப்படி சித்தரிக்காமல் அதற்கு மதச்சார்பற்ற உருவம் கொடுத்து சித்தரிக்கிறார்கள். இந்துமதத்தில் எப்படிவேண்டுமானாலும் சித்தரிக்கலாம்தான். ஆனாலும் இன்னும் கூட பழைய சேட்டையைச் செய்கிறார். பேசாமல் அவர் இந்துமதத்தில் சேர்ந்துவிடலாம்.

வலதுசாரிகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதில்லை. தீவிரமாகச் செயல்படுவதில்லையே?

அணுகுமுறையில்தான் வித்தியாசம். இந்துத்துவ அமைப்புகள் சாதிய ஒடுக்குமுறையை எதிர்க்கிறோம். அதற்கு மேடை போட்டுப் பேசுவதில் அர்த்தம் இல்லை. தூண்டிவிடுவதில் அர்த்தம் இல்லை. எல்லா இந்துக்களையும் ஒன்றாகக் கொண்டுவருவது எங்கள் நோக்கம். மற்றவர்கள் இந்துக்களை மாற்றானுக்கு மாற்றிவிடுவதை நோக்கமாகக் கொள்கிறார்கள். எனவே தூண்டிவிடுவார்கள். அது பத்திரிகையில் வரும். எங்கெங்கு இந்த பிரச்னைகள் உள்ளனவோ அங்கெல்லாம் இந்து இயக்கங்கள் சென்றுள்ளன. ஒருங்கிணைப்புக்காக முயன்றுள்ளன. முயன்று வருகின்றன. ஒன்று சேர்க்கும் செயல்கள் பத்திரிகையில் வராது. பிரிவினைவாதிகள் செயல்களே இடம்பெறும்.

இது திரைமறைவுப் பணியா?

அப்படி இல்லை. விளம்பரம் இன்றி பணிபுரிகிறோம்.

90க்குப் பிறகு இங்கே தலித் இயக்கங்களின் எழுச்சி உருவானது. இதை எப்படிப்பார்க்கிறீர்கள்?

ஆதி திராவிடர், ஹரிஜன் என்றால் ஒரு இந்து அடையாளம் இருக்கிறது. அவர்களை அடையாளம் இல்லாமல் ஆக்குவதற்காக உருவான சொல்தான் தலித். ஒடுக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையே. தலித் இயக்கங்களின் வளர்ச்சி என்பது சுயமரியாதைக்கான வளர்ச்சி என்று மகிழ்ச்சி அடையலாம். தவறு இல்லை. ஆனால் அந்த இயக்கத் தலைவர்கள் அந்த மக்களை இந்துவிரோதிகளாகவும் தேசியவிரோதிகளாகவும் தவறாக வழி நடத்துகிறார்கள் என்பதுதான் எங்கள் கவலை.

தமிழ்நாட்டில் சுமார் 40,000 பேர் தீவிர செயல்பாட்டாளர்களாக சங் பரிவாரங்களில் இருக்கலாம். அதில் எத்தனை தலித்துகள் இருப்பர்?

நிறைய இருக்கிறார்கள். இப்போதுகூட தேவேந்திர குல வேளாளர் மாநாடு நடந்தது அமித்ஷா வந்துபோனார். கிருபாநிதி பாஜக தலைவராக இருந்தார். பங்காரு லட்சுமணன் பாஜக தேசிய தலைவராக இருந்தார். இன்று இந்தியாவில் பெரும்பாலான தனித்தொகுதிகளை பாஜகதான் வென்றுள்ளது. ஆர்.எஸ்.எஸுக்கும் தலித்துகளுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது தவறானது.

உபியில் நடந்த பிராமணர் - தலித் கூட்டணியை தமிழகத்தில் செய்வதுதான் தேவேந்திரகுல வேளாளருக்கு பாஜக தரும் ஆதரவா?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பிரிட்டிஷார் செய்த சூழ்ச்சியால் உருவானதுதான் இன்றைய பிரிவினைப் பிரச்னைகள். தேவேந்திரர்கள் இன்று இடஒதுக்கீட்டால் சமூக அந்தஸ்து இல்லை என்று நினைக்கிறார்கள். ஏழு பிரிவுகளை ஒன்றாகச் சேர்த்து பெயரை மாற்றி சமூக அந்தஸ்து கேட்கிறார்கள். இதில் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ். ஒரு பிராமண இயக்கம் இல்லை. எல்லா சமூகத்தவர்களும் இருக்கிறார்கள். சாதிவேறுபாடு இல்லை. ஆகவே பிராமண -தலித் கூட்டணி என்று சொல்வதற்கில்லை. அப்படியானால் இடை நிலை சாதிகள் என்ன ஆவார்கள்? இது ஒரு கற்பனை.

சாதி கலப்புத் திருமணங்கள்?

மகிழ்ச்சியாக வரவேற்கிறோம். அரசியல் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறோம். காதலிப்பதற்காக தூண்டிவிட்டு ஒரு திட்டம் போடப்படுகிறது அல்லவா? அதை நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு ஆதாரம் கேட்டால் கொடுக்க இயலாது. ஆனால் உண்மை.

தமிழ்நாட்டில் வலதுசாரி இயக்கங்களின் முழுமையான ஆட்சி வருமா? அதற்கு என்ன திட்டம்?

எந்த கட்சி என்று சொல்ல இயலாது. ஆனால் இந்துத்துவ எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய ஒரு அரசு வரும்.  இன்று நாத்திகம், சாதிப்போர் போரடித்துவிட்டது. மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். நாம் அதுவாக வரும் என்று காத்திருக்கவில்லை. அமைதியாக அதற்கான எங்கள் வேலையைச் செய்கிறோம்.

அக்டோபர், 2015.